Photobucket

Saturday, November 7, 2009

பாரதி காட்டும் வாழ்க்கைப் பாடம்



காதல் காதல் காதல்
காதல் போயிற் காதல் போயிற்
சாதல் சாதல் சாதல்

(குயிலின் பாட்டு)


காதலினால் மானுடர்க்கு களவியுண்டாம்,களவியிலே மானுடர்க்கு கவலை தீரும்,
......................................................................................................


ஆதலினால் காதல் செய்வீர் உலகத் தீரே!
அஃதன்ரோ இவ்வுலகத் தலைமை யின்பம்,
காதலினால் சாகாமல் இருத்தல் கூடும்,
கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்.

..................................................................................................

மாதரின்பம் போற்பிரிதோர் இன்பம் உண்டோ?
காதல்செய்யும் மனைவியை சக்தி கண்டீர்,
கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்.
                                                                                               (காதலின் புகழ்)

காதலினால் உயிர் தோன்றும்
காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்
காதலினால் அறிவு எய்தும்
                                                                                             (அந்திப்பொழுது)


பாரதி என்றால் கவிதை மட்டும் அல்ல
வீரம் மட்டும் அல்ல
காதலும்தான் .. ..

மனதை கெளவி அள்ளுதல் காதல்.
காதல் வாழ்கையின் ஆதாரம்.
காதல் இல்லாத ஜீவராசிகள் மண்ணில் கிடையாது.

காதல் எனும் சக்தி வீறு கொண்டிருந்தால் 
வாழ்க்கையின் முழுவதும் வெற்றி.
காதல் எனும் சக்தி சோர்வு கொண்டிருந்தால் 
வாழ்க்கை என்பது தோல்வி .
வாழ்வே மாயம்.

காதலை காமமாக்கி கொள்வோர் மூடர்.
காதலை வாழ்க்கையாக்கி வாழ்வோர் மனிதர்.
காதலை காதலாக்கி வாழ்வர் தேவர்.
பாரதி தேவன் ...
தேவ நிலையை எய்தவன்.

பாரதி மண் கண்ட - ஆனால்
கண் காணாத காதலுக்குள்
வீறு கொண்டிருந்தான் .
அவனுக்கு கண்ணம்மா
என்று ஒரு காதலி .

அவன் காதலி கண்ணம்மா ...... அவனது 
உயிர்த் தீயினில்
வளர் சோதி .


வளர் சோதி

- வளர்த்த சோதி
- வளரும் சோதி
- வளர்கின்ற சோதி

கண்ணம்மா காலத்தை வென்றவள்.
முக்காலத்திலும் வாழ்பவள்.
சாகா வரம் பெற்றவள்.

வளர் சோதி எனும்
வினைத் தொகை அவள்
வினைக்குள் தொக்கி நிற்பவள்.
மறைவு பெற்றிருப்பவள்.
மங்கள வாக்கு
நித்யானந்த ஊற்று
மதுர வாய் அமிர்தம்
இதழ் அமிர்தம்


சங்கீத மென் குரல்
சரஸ்வதி வீணை

..........................................
மங்கள கைகள்
மகாசக்தி வாசம்

..........................................
பொங்கி ததும்பி
திசை யெங்கும் பாயும்
புத்தன்பும் ஞானமும்
மெய்த்திருக்கோலம்
(கண்ணம்மாவின் எழில்)
இவள்தான் பாரதியின் கண்ணம்மா .


கண்ணம்மா என்றாலே
பாரதிக்கு எப்போதுமே உற்சாகம்
துச்சப்படு நெஞ்சிலே- நின்றன்
சோதி வளரு தடீ!
பேச்சுக்கிடமே தடீ- நீ
பெண்குலத்தின் வெற்றி யடீ!
ஆச்சர்ய மாயை யடீ!-
..................................................
தேவி ! நினை விழுந்தே னடி!
ஞால வெயிலினிலே- நின்றன்
ஞான வொளி வீசுதடி!
கால நடையினிலே- நின்றன்
காதல் விளங்குதடி!
(சந்திரமதி)

வாயுரைக்க வருகுதில்லை
வாழிநின்றன் மேன்மையெல்லாம்
......................................................
வீரமடி நீயெனக்கு
வெற்றியடி நானுனக்கு

                                                                             (கண்ணம்மா- என் காதலி 6)

பாரதி ஒரு கனவுக் கவிஞன்.
ஒரு சித்தர், ஒரு யோகி.
தீர்க்கதரிசி.
காலத்தை வென்று வாழ்திருப்பேன்- என்ற
ஆத்ம ஞானி .
ஒரு சித்தரின் .. ..
தீர்க்கதரிசியின் காதல்

கட்டிய மனைவியோடு ................
செல்லம்மாவோடு மட்டுமல்லாது
கண்ணம்மாவோடு ஏன் !

பாரதிக்கும் கள்ளத்தனமா?
கட்டிய மனைவிக்கு துரோகமா?
கற்பில்லதவரா ........பாரதி.

ஆண்கள் என்றால் அவ்வளவுதானா !
மேன்மக்கள் தவறுவார்களா ?
பொய் வார்த்தை
வார்ப்பார்களா ?

கள்ளத்தனங்கள் .. ..
கூடா காதல்
ஒருபோதும் பாரதிக்கு இருக்க முடியாது
எவருக்கும் துரோகம் 
இளைப்பான் அல்லன் பாரதி


கற்பெனும் சொல்லை
ஆணுக்கும் பெண்ணுக்கும்
பொதுவில் வைப்போம் - என்று
ஆண் பெண் கற்புக்கு
பொதுமை கண்டவன் பாரதி

காதல் வாழ்க்கை மட்டுமல்ல
கற்பு வாழ்க்கையையும்
ஒருங்கே கற்பித்தவன் பாரதி.
சோரரைப்போல் ஆண்மக்கள் புவியின் மீது
சுவைமிக்க பெண்மை நலம் உண்ணுகின்றார்
காரணந்தான் யாதெனிலோ, ஆண்கள் எல்லாம்
களவின்பம் வேண்டுகிறார்.. . கற்பே மேல் என்று
ஈரமின்றி எப்போழுதும் உபதே சங்கள்
எடுத்தெடுத்து பெண்களிடம் இயம்பு வாரோ ?

....................................................................................................

ஆணெல்லாம் கற்ப்பைவிட்டு தவறு செய்தால்,
அப்போது பெண்மையுங்கற் பழிந்திடாதோ?

...................................................................................................

பேணுமொரு காதலினை வேண்டியன்றோ
பெண்மக்கள் கற்புநிலை பிறழுகின்றார் ?
காணுகின்ற காட்சியெல்லாம் மறைத்து வைத்துக்
கற்புக் கற்பு என்று உலகோர் கதைக்கின்றாறே!

                                                                                              (விடுதலை காதல்)

தனக்கொரு நீதி
உலகத்திற்கு ஒரு நீதி
சொல்வான் அல்ல பாரதி.

பாரதியின் கண்ணம்மா
நித்ய கன்னி
அவளைஆவி தழுவி
அவன் பெற்ற இன்பங்கள் ..... 
பேரின்பம்

ஒரு முறை மருவக் காதல் கொண்ட
பாரதியிடம் கண்ணம்மா சாத்திரம்  பேசுகின்றாள்
சாத்திரம் பேசுகிறாய்- கண்ணம்மா
சாத்திர மேதுக் கடி!
ஆத்திரங்
கொண்டவர்க்கு கண்ணம்மா!
சாத்திர முண்டோ டி!

.. .. .. .. .. .. ..
காத்திருப் பேனோடி ..
இதோ பார்
கன்னத்து முத்தமொன்று !                       
(கண்ணம்மா என் காதலி)
அவளது கன்னத்தில் முத்தமிட
அவன் காட்டிய வேகம் .. 
அதுதான் எத்துணை  அசுரத்தனம் .
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலிதீர்த்தே- உலகில்
ஏற்றம் புரிய வந்தாய் !
மெச்சி உனை ஊரார்- புகழ்ந்தால்
மேனி சிலிர்க்கு தடி !
கன்னத்தில் முத்தமிட்டால்- 
\உள்ளந்தான்கள்வெறி கொள்ளு தடி
.........................................................................

சொல்லு மழலையிலே கண்ணம்மா!
துன்பங்கள் தீர்ந்திடு வாய்!
முல்லை சிரிப்பாலே எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய்

.........................................................................................

அன்பு தருவதிலே- உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ ?

.................................................

சீர்பெற்று வாழ்வதற்கே- உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ ?
                     (கண்ணம்மா என் குழந்தை)
அவள் புகழ் பாடாமல்
அவன் இருந்ததில்லை .


தன்னுடன் இரண்டறக் கலந்த
கண்ணம்மா சோகத்தை ஒருபோதும்
அவன் தாங்கினான் இல்லை .. ..
உன் கண்ணில் நீர் வழித்தால்
என் நெஞ்சில்
உதிரங் கொட்டு தடி
என் கண்ணிற் பாவை யன்றோ ?
கண்ணம்மா !
என்னுயிர் நின்னதன்றோ

                                                                               (கண்ணம்மா என் குழந்தை)


ஒருமுறை அவனைப்
பார்க்க வருவதாக இருந்த கண்ணம்மா
வர முடியாமற்
போய்விடுகிறது .


வார்த்தை தவறி விட்டாய்
அடி கண்ணம்மா !
மார்பு துடிக்கு தடி,
..............................................
மேனி கொதிக்கு தடி
தலை சுற்றியே
வேதனை செய்கு தடி !
...............................................
இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே
நான் ஒருவன் மட்டிலும்
பிரி வென்பதோர்
நகரத் துழழுவதோ ?
                                                                               (கண்ணம்மா என் காதலி -5)

வீர பாரதிக்குள்ளும்
பூவிலும் மெல்லிய
காதல்
வாழ்க்கை .
வாழ்க்கை என்பது
சாத்திரங்கள் , சம்பிரதாயங்கள் ..
சமயங்களால் ஆனதா ?
வாழ்க்கை என்பது
வாழத் தான் , ஆனால் 
வாழும் வழி யாது ?
வாழும் வகை யாது ?

மானிட வாழ்வியல்
புற உடல் வாழ்க்கைக்குள்
அடங்கி விடக் கூடியதா  
அக உடல்
வாழ்க்கை
என்பது கிடையாதா ?

உடல் என்பது சதை பிண்டமும்
இருதயமும் மூளையும்
குடல் கொழுப்புகளும் தசை நார்களும்
ஐம்பொறிகளும் அதன் ஐம்புலன்களும்
எலும்புகளும்
நாடிநரம்புகளும் தானா ?

உடல் என்பதற்குள்
உயிர் இல்லையா ?
ஆன்மா இல்லையா?

உடலுக்குள் உயிர்
உடல், உயிருக்குள்,
ஆன்மா .. 
உடல், உயிர், ஆன்மாவுக்குள்
மூளையின் எண்ணங்கள் ..  நினைவுகள்
இதயத்தின் மனங்கள்
உணர்ச்சிகள்..  உணர்வுகள்
என்னென்னவோ இருக்கின்றனவே   ..
உடல் என்பது எத்துணை  விரிந்தது !


எல்லாவற்றையும்   தாங்கும்   உடலை
' தாமரை இலை
தண்ணீராய் '
உயிர் விட்டு விடுகிறது.
' தங்கும்  
தண்ணீரை  தாங்காத  தாமரையாய் '
ஆன்மாவை விட்டு விடுகிறது.

உடல், உயிர், ஆன்மா, 
என்னே கூடாத  .. 
இவற்றின் கூட்டின் ரகசியம் !.


விட்டு விடுவது .. ..
பிரிவு படுவதாக
ஒன்று படாததாக 
ஒன்றுக்குள் ஒன்று
தன்னைத்தான் இழக்காததாக
ஒருமித்த ஒன்றுக்குள்
வேறுபடுவதாக இருக்கிறது.
தேவைகள் வேறாகிறது - அவற்றின்
தாகம் வேறு
பசி வேறு
தவிப்பு வேறு
ஒன்றை தழுவி ஒன்று
ஒன்றாக வாழினும்
அவை முழுவதுமாக
வேறு வேறு

உடல் புலன்களின் தேவையை பேசுகிறது .
அதற்கு எப்போதுமே
பசியும் தாகமும்
பருப்பொருள் தாகம் ... 
பருப்பொருள் பசி ... 

உயிருக்கும் இங்கு
எப்போதும் பசி தாகங்கள்
உயிரின் பசி -அன்பு
உயிரின் தாகம் -அன்பு



அன்பு
என்றால் சிவம்
சிவம்
என்றால் அன்பு
அன்பு வேறு சிவம் வேறு என்பார் அறிவிலர் - திருமூலர்
சிவம் (சீவன் / ஜீவன்) என்றால் உயிர்



உயிர் உடலுக்குள் இருக்கும் போது உயிர்
உடலை விட்டு நீங்கும் போது ஆவி.

ஆவி  ஆன  பின்னும்  
ஆட்டிப்படைக்கும்  நிலையில் தான்  
ஆவி .. பேயாகிறது. 


யோகிகளின் .........
சித்தர்களின் .........
உடலை விட்டு
உயிர் பிரிந்து
துலங்கும் .
அல்லது
உடல்  , உயிர்  இரண்டையும்   பிரிந்து
ஆன்மா  எனும்  ஒளி / சோதி  தனித்து   நிற்கும் 
தனித்து துலங்கும்.
உயிர்  என்றால்  ஆத்மா .. 
ஆத்மா  என்றால்  உயிர்  - என்பதெல்லாம்  
பாரதி  வாழ்வியலில்  சரி  படாது.



பாரதியின் உடலினும்
பன்மடங்கு அவனது
உயிர் வலிமையானது
தாமரையிலை
தண்ணீராய் .. அவ்வப்போது
தங்கும்
தண்ணீரைத் தாங்காதத் தாமரையாய் 
துலங்கி நின்ற உயிர்க்கு .. 
கண்ணம்மா கிடைத்தாள்..


கண்ணம்மா ....கண்ணம்மா...... என்றான்
மார்பு சேரத் தழுவி நிகரிலாது வாழ்வேன் என்றான் .
மன்மதக் கலை சொல்லித் தெரிவதில்லை என்றான்.
கனி கண்டவன் தோலிருக்க காத்திருப்பேனோ என்றான்.

கண்ணம்மா அவன்
உயிர்க்கு கிடைத்த காதலி
ஒன்றிலிருந்து ஒன்று ஆகி வந்தபின்
இனி அது அதுவல்ல .. ..
பாரதி செல்லம்மா
எனப்படுபவன் வேறு
பாரதி கண்ணம்மா எனப்படுவது வேறு.


ஒரு முறை நாணி முகம் மறைத்த கண்ணம்மா
வண்ண முகத்திரையை வலிது உரிந்தான்
அவள் கையை பற்ற
தனக்கு பயமில்லை என்றான்
கன்னம் கன்றிச் சிவக்க
கன்னத்தில் முத்தமிட்டான்

கூடி பிரியாமலே ஓரி ராவெல்லாம்
கொஞ்சி குலவியங்கே ,
ஆடி விளையாடியே
உன்றன் மேனியை
ஆயிரங் கோடி முறை
நாடித் தழுவி
மனக்குறை தீர்ந்து நான்
நல்ல களி யெய்தியே,
பாடி பரவசமாய்
நிற்கவே தகம்
பண்ணிய தில்லையடி
!
                                                                            (கண்ணம்மா என் காதலி - 5)
கண்ணம்மா எப்பொழுதுமே
அவன் தேவையை அறிந்து நடந்தாள்
அவனுக்கு ஈடு கொடுத்தாள்.
காரணம் அவள் இன்ப  ஊற்று.


உடல் உடலோடு சேரத் துடிக்கும்
உயிர்  உயிரோடு  சேரத் துடிக்கும்
உடலின் தேவை - காம சுகம்
அவன் பெற்ற இன்பங்கள் சராசரி
வையக மாந்தர் அறிந்திராத இன்பங்கள் .
யோகநிலை இன்பங்கள்..



கண்ணம்மா அவனது
உயிர்த் தீ .
உயிரில் உறையும்
ஆத்மாவாக இருந்தாள் .
அதன் வளர் சோதியாக
ஒளியாக இருந்தாள் .

உடல் சார்ந்த
சிற்றின்பத்துக்கும் மேலாக
உயிர் சார்ந்த
ஆத்மா சார்ந்த
இன்பங்கள் ... பேரின்பங்கள்
யோகிகள் கண்ட இன்பங்கள்
சித்தர்கள் கண்ட இன்பங்கள்
மண்ணில் பாரதியால்
மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது.


உடலில் துலங்கிய ஒரு பாரதி - மனிதன்.



உயிரில் துலங்கிய இன்னொரு பாரதி - சித்தன் / யோகி.



உடலையும் உயிரையும் கடந்து
ஆத்மாவால் துலங்கிய அடுத்த பாரதி - தீர்க்கதரிசி.



ஸ்தூல உடல் சதையால் ஆனது
சூட்சம உடல் (ஆவியால்) காற்றால் ஆனது .
ஸ்தூல, சூட்சம உடல்களோடு மட்டுமா
மானிட உடலியல் ..
அந்தோ இன்னும் இருக்கிறது .. .
ஒளி உடல் ..(தேவர் உடல்)

ஸ்தூல உடல் ,
சூட்சம உடல் ,
ஒளி உடல்
உடல் 3  (ஆதாரம்:யோக சூத்திரம்)
எல்லாவற்றிட்குள்ளும் அதே ஆத்மா
வெவ்வேறு நிலையில் .. ..

ஆத்மா எனப்படுவது
ஸ்தூல உடலுக்குள் - மறதி நிலை
சூட்சம உயிர்ருக்குள் - அவஸ்தை நிலை
பேரொளி ஆத்மாவுக்குள் - பிறப்பின் பயன்


(ஆதாரம் : காதர் இப்ராகிம் )

ஆத்மா பேராத்மாவோடு கலக்க துடிக்கும்.
ஆத்மா என்றாலே இறை .
ஆத்மாவின்  பாரதி ;
பெருந்தாகம் உடையவன்
பெரும்பசி உடையவன்
சரஸ்வதி, லட்சுமி, காளி, சந்திரமதி
எல்லாரையும் காண்கிறான்
எல்லாரிடமும் காதல் கொள்கிறான்.
ஆத்மாகளின் பேராத்மா கண்ணா
பேராத்மாவோடு கலக்க துடிக்கிறான்.
காதல் சொல்கிறான்.


எதிலிருந்து.. ..எங்கிருந்து  பிரிந்தோமோ
அங்கேயே சென்று சேர துடிப்பது
சங்கமம் எனப்படுவது.


இதுவே வாழ்வியல் தத்துவம்.


உடலுக்குள் வதைப்பட்ட
பாரதியின் ஆத்மா
உயிருக்குள்ளும் வதைப்பட்டது .
பாரதி செல்லம்மா இருந்தும் .. ..
பாரதி கண்ணம்மா இருந்தும் .. ..
அது அழுதது ...
பாரதி அழுதான் .
பாரதியின் தேவை நிறைவேறவில்லை
வாய்த்த உடல், உள்ளம், உயிருக்கும் அப்பால் -
விசையுறு பந்தினையே
உடல் வேண்டியப்படி
செல்லும் வரம் கேட்டேன்,
நசையுறு மனங் கேட்டேன்
நித்தம் நவமேனக்
சுடர்தரும் உயிர் கேட்டேன் -
பாரதியின் ஆத்ம தாகம்
அவனை வாட்டி வைத்தது
அவனது... ஆத்மா தாகத்திட்குரிய
அந்த தேவை யார் .?... எது ?

சொன்னான் பாரதி
தாய் என்று சொன்னான்
சக்தி என்று சொன்னான்
பாரதியின் ஆன்மா
தாய் வடிவினள்
அவள் பாரதத்திற்குத் தாய்
அவள் தமிழன்னை .. தமிழுக்கு தாய்
பாரதியின் ஆத்மா .. 
பாரத சக்தி ;
தமிழன்னை சக்தி ;
தமிழ் சக்தி .

அவனது ஆத்மா தாகம் 
அடங்கி விடும் .. தீர்ந்துவிடும்
சுதந்திர தாகம் தீர்தல்
சாதி அழிதல்
அடிமை ஒழிதல்
அறியாமை நீக்கல்
பாரதத்தாயின் நலம் பேணல்
தமிழன்னை கண்ணீர்த் துடைத்தல் ...
தமிழ் மொழியை வாழ வைத்தல்
வீதிகள் தோறும் பள்ளிகள் செய்தல்
எல்லாம் நிறைவேறும் ...


மரணம் உடலுக்குத்தான்
உயிருக்கல்ல... ஆன்மாவுக்கல்ல
அந்த மனிதனின்   உணர்ச்சி, உணர்வுக்கு   அல்ல ...
மனம், எண்ணம், நினைவுகளுக்கல்ல

ஆத்மாவை
ஆத்ம சுகத்தை
ஆத்ம சக்திகளை கண்ட பாரதி
கண்டிப்பாக அதன் தேவையை
கால வெள்ளத்தில் நிறைவேற்றி விடுவான்.


மனிதவியல்  உடல்  வாழ்க்கை 
ஒரு முறை ;
அவன்  உயிரின் , ஆத்மாவின் 
செயல்  வாழ்க்கை   சென்மாந்திரம் ;
தொடர்கதை.


மீண்டும் மீண்டும்
விட்ட இடத்திலிருந்து
தொடரப்படுவது ......
முழுமை நோக்கி நகர்வது ......செயல் .


செயலுக்காக வாழ்ந்திருப்பவன் பாரதி
காலத்தை வென்று வாழ்ந்திருப்பேன் என்ற பாரதி
தன் கனவுகளுக்கு
தன் கண்ணம்மாவுக்கு
வடிவம்  காணமற்  விட்டிருப்பானா ..?
விட மாட்டான் .. 


அவன் தன் பாட்டுக்குள் சொல்லி வைத்ததை
மீட்டு வைப்போம் .
அவனை வாழ வைப்போம் .
அவன் கனவுகளை
அந்தக் கண்ணம்மாவைத்
தேடிப்  பார்ப்போம் .


ஆக்கம் : 18. 11. 2006

No comments: