Photobucket

Saturday, November 14, 2009

கவலைப்பட என்ன இருக்கிறது ! - 6


யாருக்கு வேண்டும் இங்கு கவலைகள், விட்டு விடுபடுவது வாழ்க்கை

எல்லாம் அறிந்தவர்
கவலைப்பட மாட்டார் .


கவலைப்பட மாட்டாதவர்
எல்லாம் அறிந்தவராக இருக்கிறார் .


எல்லாம் அறிந்தவர்
விட்டு விடுபடுவார் ;
வெளிப்பட்டு வந்து விடுவார் .


கவலைப்படாமை
விட்டு விடுதலில் ....
விட்டு விட்டு வந்து விடுதலில் ....
விட்டு விடுபடுவதில் ....
அடங்கி இருக்கிறது .



விட்டு விடுதல் ;
விட்டு விட்டுபட்டு வந்து விடுதல் ;
விட்டு விடுபடுதல் ....
வாழ்க்கையை அல்ல .
செயல்களை அல்ல .
செயல்களின் விளைவுகளை ,
நன்மை தீமைகள் அல்ல .
அதன் பலா பலன்களை !


யாருக்கு வேண்டும் இங்கு பலா பலன்கள்?
சேர வேண்டிய பலன்கள்
சேரும் இடம் சேர்ந்து விட்டு
சேர்ப்பித்து விட்டு,
விட்டு விடுபட்டு வந்து விடுவர்
எல்லாம் அறிந்தவர் ....
கவலைப்பட மாட்டாதவர் .


எல்லாம் அறிந்தவர் ....
கவலைப்பட மாட்டாதவர் ....
செயல்களை விடமாட்டார் .
செயல்களின் விளைவுகளை ....
நன்மை தீமைகளை விடமாட்டார் -அவர்
செயல்களின் பலா பலன்களை  மட்டுமே
விட்டு விடுவார்- அதிலிருந்து
விடுபட்டு வந்து விடுவார் .


விட்டு விடுதல்
விட்டு விட்டு வந்து விடுதல்
விடுபட்டு வந்து விடுதல்
விட்டு விடுபடுதல்
பற்றற்றல் எனப்படும்


பற்றற்றல்
பலன்களைத் துறப்பதில் இருக்கிறது
பலா பலன்களை அர்ப்பணம் செய்வதில் இருக்கிறது
பலா பலன்களை சமர்ப்பணம் செய்வதில் இருக்கிறது


பற்றற்ற நிலை ,
பலன்களை துறக்கும் நிலை ,
பலா பலன்களை
அர்ப்பணம் செய்யும் நிலை ;
சமர்ப்பணம் செய்யும் நிலை ;
கை கழுவும் செயல் அல்ல .
தலை முழுகும் செயல் அல்ல .
நட்டாற்றில் விடுதல் செயல் அல்ல .
நம்பிக்கை மோசம் அல்ல .


கை கழுவுதல் -
பொறுப்பில் இருந்தும் விலகும் செயல் .
தலை முழுகுதல் -
உறவைத் துண்டிக்கும் செயல் ;
தொடர்பை விட்டு விடும் செயல் .
நட்டாற்றில் விடுதல் -
தத்தளிக்க...தவிக்க...,
தடுமாற வைக்கும் செயல் .
நம்பிக்கை மோசம் -
ஏமாற்றும் செயல் .


தாமரை
இலையில் , திரண்ட தண்ணீர்
பற்றற்ற நிலையில் உள்ளது ;
இலையில் பற்றாமல் இருக்கிறது .
தாளின் ஆட்டத்திற்கு ;ஏற்ப
நீரின் ஆட்டத்திற்கு ;
அசைந்தாடும் காற்றின் ஆட்டத்திற்கு ;
ஆட்டம் போடுகிறது ...உருளுகிறது
அவ்வப்போது உருண்ட
அது
சிலவேளை தத்தளிக்கிறது ....
அங்கும் இங்கும் அலைக்கழிந்து
அலைக்கழிக்கப்பட்டு
முடிவில் சேருமிடம் சேருகிறது
நீரோடு நீராகிறது .


பற்றற்ற நிலை
தாமரை
இலையில்
திரண்டு உருண்ட தண்ணீர் போல் இருக்கிறது .



பற்றற்ற நிலை
தாமரை இலையின் தண்ணீரின்
தத்தளிப்பு....
அலைக்கழிப்பு ... அல்ல
மரம் ஒன்று நடப்படுகிறது -செயல்


நடப்பட்ட மரம் வளர்ந்து ஆளாகிறது .
ஆளாகிய மரக் கிளைகள் தோறும்
பூப்பூத்து காய்கள் -செயலின் விளைவு


பூத்து காய்த்த
காய்கள், பழங்கள்
சிலவற்றில் புழு, பூச்சிகள் .
சில அரிப்பட்டு விட்டன .
சில உழுத்து, புழுத்து விட்டன .
பிஞ்சிலே பழுத்து வெம்பி ,
வீழ்ந்து விட்டன சில .
பல காய்த்து பழுத்து
கனியத் தொடங்கி விட்டன -
விளைவுகளின் நன்மை தீமைகள்
-விளைவுகளின் நல்லது கெட்டதுகள்


கனிந்த பழங்கள்
மிளிர்ந்து காணக் கிடக்கின்றன
கண் கொள்ளாக் காட்சி தருகின்றன .
வா !... என்று இரந்து அழைக்காத
வௌவால்கள் ... பறவையினங்கள்
உண்டு மகிழ்ந்து, வந்து போகின்றன .


பறிப்பதும்
தின்பதும் ....
விற்பதும் பையும் கையும் பணமுமாக
மரத்துக்குச்  சொந்தக்காரர் .
அவரவர்க்கும், அது அதுக்கும்
தேவை நிறைவு ஏறியதில்
ஏதோ ஒரு மன நிறைவு
ஆங்காங்கு ஆத்ம திருப்தி -செயலின் பலாபலன்கள்


செயல்
செயலின் விளைவு
செயலின் நன்மை தீமைகள்
செயலின் பலா பலன்கள்
அவ்வாறாக- அந்த மரமாக இருக்கின்றன .
பலன் கருதா சேவை- அந்த மரத்திற்கு உரியது .


சளைக்காத அந்த மரம்
இப்போது! இந்த வேளை...
பற்றற்ற நிலைக்கு
விட்டு விடுவதற்கு
விடுபட விரும்புதலுக்கு
தயாராகிறது; வினையாற்றுகிறது .


கிட்டாத தூரத்தில்
எட்டி இருந்த பழங்கள் ;
இலைமறை காய் வகை
மறைவு பட்ட பழங்கள் ....
சொந்தம் பாராட்டாத மரத்தினின்று
உரிமை விரும்பா மரத்தினின்று
நீங்கல்படு பொருள் ஆகின்றன .
மரத்தின் வகையறிந்து, வாகையரிந்து
காம்புகள் பழங்களை
விட்டு விட்டன ;
விடுபட செய்து விட்டன .
பற்றற்ற நிலை -அந்த மரத்தினது .


விடுப்பட்ட பழங்கள்
வீழ்ந்த பழங்கள்
கிட்டி வந்து உணவாகி -ஆங்காங்கு
உண்ணு பொருள் ஆகின்றன .
பழுது பட்டன
மண்ணுக்கு உரமாகின்றன .
அவை அவற்றிற்குரிய
செயல்களில் இருக்கின்றன .


இதில் கவலைப்பட என்ன இருக்கிறது !


விட்டு விட விரும்பியது மரமா !
விடுபட்டு வந்து விட ;
விட்டு விட்டு வந்து விட ;
விட்டு விடுபடுதலை விரும்பியது பழமா ?
ஏதோ ஒரு விதி
எப்போதுமே எல்லாருக்குமே
பொதுவில் அமைந்ததாக
நடுநிலை தவறாததாக
இருந்து கொண்டே இருக்கிறது .


யாருக்கு வேண்டும் இங்கு கவலைகள் ?
விட்டு விடுவது
விட்டு விடுபட்டு   வந்து  விடுவது
நிர்மூலம் அல்ல .....நிரந்தரம்
( நிரந்தரம்= இறை )
அது நிலையானது .
நிலைப்பேறு பெற்றது .
சாகா வரம் பெற்றது
சிரஞ்சீவி ....


பழங்கள் அதற்குரிய செயலில்
இருப்பதுபோல்
மரம் அதற்குரிய செயலில் இருக்கிறது .
மீண்டும் மீண்டும்
புதுப் புது பூக்கள்
பூத்துக் குழுங்க ....
பூப்பூத்து காய்க்க ....
காய்த்து கனிய ......
பலன் கருதா சேவை
பற்றற்ற சேவை
தொடரும் கதையாகிறது .


யாருக்கும்  வேண்டாம் கவலைகள் .....
விட்டு விடுவது
விட்டு விடுபடுவது- வாழ்க்கை .
எங்கும் நிறைந்த ஞானம்
மறக்கபட்டதாக இருக்கிறது
அது மரத்தோடு மட்டுமே ....
மர
ஞ் செடி கொடிகளோடு மட்டுமே வாழ்கிறது .


அறிய வேண்டும் நாம் !
விட்டு விடுதல் ....
விட்டு விடுபடுதல் ......
நிர்மூலம் அல்ல.... நிரந்தரம்
நிரந்தரம்   எனும்   இறை ....இறையாண்மை .


(ஆக்கம்: 18/11/2001)

No comments: